வீட்டு வரியை விர்ருனு ஏத்தீட்டீங்க... சொத்து வரிய பலமடங்கு உயர்த்திட்டீங்க, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை கடகடனு அதிகமாகிட்டீங்க உழைச்சு சம்பாதித்து அதை கொண்டு வந்து உங்களுக்கே மொய் வைக்கனுமா? என ஈரோடு மாநகர மக்கள் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மீது கொதிநிலையில் உள்ளார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அவர்கள் ஈரோடு மாநகரில் கடுமையாக உயர்த்தப்பட்ட சொத்துவரி ,வீட்டுவரியை பாதியாக குறைக்க வேண்டும் என்றும், ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு பிளம்பர்கள் விதிகளுக்கு புறம்பாக அதிகளவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் எனவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதோடு பாதாள சாக்கடை மூடிகள் சாலையின் நடுவில் அமைக்கப்படுகிறது. அது தரமற்றதாகவும், மேடு பள்ளமாக இருப்பதை சீமைக்க வேண்டும்.
ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக மொத்தத்தில் மக்களை காவு வாங்கும் மரண குழிகளாக இருக்கிறது. அதை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர் அலுவலக அறை முன்பு நின்று கோஷம் எழுப்பினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீஸார் இங்கு கோஷம் எழுப்ப அனுமதி இல்லை என்று கூறியவுடன் அவர்கள் கோஷம் போடுவதை நிறுத்தி விட்டு தங்களது கோரிக்கைகளை கமிஷனர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்தனர்.
ஈரோடு மாநகராட்சி சாலைகள் அனைத்தையும் பாதாள சாக்கடை, மண்ணுக்குள் மின் கேபிள், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பைப் லைன் என எல்லா சாலைகளையும் வெட்டி கூறுபோட்டு விட்டார்கள் சந்து, பொந்து எல்லா இடங்களிலும் மரண குழிகள் அதில் பயணிக்கும் மக்கள் உடல் காயமில்லாமல் திரும்பி வருவது வீரதீர செயல்தான்.