Skip to main content

நாங்குநேரி சம்பவம்; ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை 

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Nanguneri Incident The hearing was presided over by a retired judge

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

 

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவர் சின்னத்துரையின் தாயாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருந்தார். அப்போது, “தைரியமா இருங்க.. எதுக்கும் கவலைப்படாதீங்க” என முதல்வர் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

 

Nanguneri Incident The hearing was presided over by a retired judge

 

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும்,வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், “சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்துத் தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள். இச்சூழ்நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சிந்தனைகளற்று, சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய தமிழ்நாடு படைத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

 

இந்நிலையில் நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை தெரியவருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவர் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அம்மாணவனின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

 

Nanguneri Incident The hearing was presided over by a retired judge

 

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்