சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் கடந்த 6 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு புதிதாக சிலை அமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ் ஆளுநர் மளிகை சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்புக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கும் அனுப்பப்பட்டது.
விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகையின் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் ஆளுநர் பெயரும் மத்திய இணை அமைச்சர் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் பெயரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பெயரும் விடுபட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்செயல் தவறுதலாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பெயர் விடுபட்டுள்ளதா என்ற ரீதியில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக இந்தச் சம்பவம் உள்ளது. மேலும், இந்தச் சிலை திறப்பு நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற விழா இரண்டு மணி நேரம் நடைபெற்ற நிலையில், ஆளுநரும் மத்திய இணை அமைச்சரும் பேசிய நிலையில், தலைமைச் செயலாளரையும் அமைச்சரையும் பேச அழைக்காமல் தவிர்த்ததும் பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.