Skip to main content

எஸ்.பி.வேலுமணியின் பெயரில் மோசடி; அரசு வேலை வாங்கித் தருவதாக 38 லட்சம் ரூபாய் சுருட்டல்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

In the name of former minister S.P. Velumani Rs. 38 lakh fraud

 

சேலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கார் ஓட்டுநர் எனக்கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

 

சேலம் மணியனூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மனைவி தேன்மொழி (30). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரர் காசி விஸ்வநாதன் மற்றும் உறவினர்கள்  சீனிவாசன், சுமதி ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ''கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பட்டணத்தைச் சேர்ந்தவர் சுதாகரன். அவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கார் ஓட்டுநராக வேலை செய்து வருவதாக எங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு அமைச்சருடன் நெருக்கமான பழக்கம் இருப்பதாகக் கூறிய அவர், எஸ்.பி.வேலுமணியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் காட்டினார்.    

 

சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று சிலரை அறிமுகம் செய்து வைத்தார். இதனால் எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி எங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார். நாங்களும் அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு மொத்தம் 9 பேர் சேர்ந்து 37.50 லட்சம் ரூபாயை சுதாகரன் கேட்டுக் கொண்டதன் பேரில்  அவரிடம் கொடுத்தோம்.     

 

இதையடுத்து அவர், எங்களுக்கு அரசு வேலை கிடைத்ததற்கான பணி ஆணைகளை வழங்கினார். அந்த பணி ஆணைகளுடன் சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று விசாரித்தபோதுதான் அவை போலியானவை என்பது தெரிய வந்தது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுதாகரன் எங்களிடம் பணம் வசூலித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார். எங்கள் பணத்தைக் கேட்டு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவரும், அவருடைய மனைவி பிரபாவதியும் ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.    

 

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புஷ்பராணி முதல்கட்ட விசாரணை நடத்தினார். அதில் சுதாகரன் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுதாகரன், அவருடைய மனைவி பிரபாவதி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சரின் கார் ஓட்டுநர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் சுருட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்