18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக நமது அம்மா நாளிதழில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. பதினெண் கீழ் கணக்கு என்ற தலைப்பில் வந்துள்ள அந்த கவிதையில்,
செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர்கள் கணக்கு பதினெட்டு...
இலை கொண்ட இயக்கம் விட்டு, நரி கொண்ட குகை நோக்கி வழிமாறிச்சென்று, சேராத இடம் சேர்ந்து செயலிழந்த தம் பதவி...
மீண்டும் உயிர் வந்து வாழுமோ என விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை மொத்தமும் பதினெட்டு...
என்ன செய்வது..
மண்ணில் விழும் மழைநீர் போல், மனிதரும் சேரும் இடம் பொறுத்தே தன்னிலையில் உயர்ந்து வாழ்வதும், தடம் மாறிச்சென்று தலை குனிந்து வீழ்வதும்...
கரம் சிவக்கக் கொடுத்துச் சிறந்த கர்ணனும், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால் தான்...
சகுனியைச் சார்ந்தோர் அழிந்ததும்..
சாரதியாம் கண்ணனைச் சார்ந்தோர் வாழ்ந்ததும்...
அவனை நம்பிய அவல் குசேலனும், அதிகுபேரன் ஆனதும்.. குலம் பார்த்து கூடியதால் மட்டுமே!
செம்புலப் பெயல் நீர்போல் சேரும் இடம்பொறுத்தே சிறப்புகள் எட்டுகிறது. போய்ச் சேரும் வழி பொறுத்தே பொறுப்புகள் கிட்டுகிறது!
திருமாலை வணங்கியதால் முடிதுறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்தது போல, நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியுமுன்னே நன்மைகள் குவிகிறது!
வாய்மையின் வழிநின்று வணங்கும் கைகளுக்கு மட்டும்தான் அது விலகுமுன்னே வரங்கள் வாய்க்கிறது!
அதைவிட்டு பதவி தந்த இயக்கத்தை மறந்து பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு சேராத இடம் சேர்ந்தால் பிறகென்ன சேதாரம் தானே... இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.