நாமக்கல் அருகே பள்ளி வளாகத்தில் சத்துணவு அமைப்பாளரிடம் தகாத உறவில் பள்ளி ஆசிரியரே ஈடுபட்டதாக கூறி ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் அடுத்த எஸ். உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன், கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜெயந்திக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ஜெயந்தியும், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆசிரியரும், அங்கன்வாடி பொறுப்பாளரும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து வந்த, ஊர்பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். அத்துடன் கல்வி அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்து, பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர், இத்தகைய ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.