Skip to main content

பழைய பேப்பர் கட்டுகளுடன் நகைகளையும் எடைக்கு போட்ட பெண்!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ராசிபுரம் அருகே, பழைய பேப்பர் கட்டுகளுடன் தங்க, வைர நகைகளையும் எடைக்குப் போட்டுவிட்ட பெண்ணிடம் நகைகளை பத்திரமாக திரும்பவும் ஒப்படைத்தார் பழைய பேப்பர் வியாபாரி. அவருடைய நேர்மையை பாராட்டி, நகைகளை எடைக்குப் போட்ட பெண் பத்தாயிரம் ரூபாய் பரிசளித்து பாராட்டினார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஏடிசி டிப்போ விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர்  சாமுவேல். இவருடைய மனைவி கலாதேவி (45). நேற்று முன்தினம் (நவ. 20, 2019) கலாதேவி, தன் வீட்டு வழியாக சென்று கொண்டிருந்த பழைய பேப்பர்காரரை பார்த்து, வீட்டில் தேவையில்லாத பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் சாமான்கள் இருப்பதாகவும், அதை எடைக்கு எடுத்துக் கொள்ளும்படியும் கூறி வீட்டிற்கு அழைத்தார்.


அதன்படி, வீட்டில் இருந்த பழைய செய்தித்தாள்கள், நோட்டு புத்தகங்கள், பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமான்களை எடைக்குப் போட்ட கலாவதி அதற்குரிய தொகையையும் பெற்றுக்கொண்டார். அங்கிருந்து பழைய பேப்பர்காரரும் சென்றுவிட்டார். 

namakkal district rasipuram old paper ties with gold jewellery


அவர் சென்ற சில மணி நேரம் கழித்து, திடீரென்று பழைய நோட்டு புத்தகங்களுக்கு நடுவே நகைகளை மறைத்து வைத்திருந்ததும், அதைத் தெரியாமல் எடைக்கு போட்டுவிட்டதும் அவருக்கு நினைவுக்கு வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், அந்த  நகைகள் பழைய பேப்பர் கட்டுகளுடன் எங்கெங்கோ சென்று விடும் அபாயம் இருப்பதை உணர்ந்த காவல்துறையினரும், கலாதேவியின் புகாரின்பேரில் துரிதகதியில் செயல்பட்டனர்.


ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், ஏடிசி டிப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பழைய பேப்பர் வியாபாரிகளிடமும் விசாரித்தனர். கலாதேவி கூறிய அடையாளத்தை வைத்து விசாரித்ததில், அவரிடம் பழைய நோட்டு புத்தகங்களை எடைக்குப் பெற்றுச்சென்றவர் சேலம் சீலநாயக்கன்பட்டி ராமன் காடு பகுதியைச் சேர்ந்த பழைய பேப்பர் வியாபாரி செல்வராஜ் (55) என்பது தெரிய வந்தது.


அவருடைய வீட்டுக்கு நேரில் சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மற்றும் காவலர்கள், கலாதேவியிடம் இருந்து எடைக்கு வாங்கி வந்த நோட்டு புத்தகங்களை காட்டுமாறு கூறினர். அவற்றை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தபோது, ஒரு புத்தகத்தின் இடையே ஏழரை பவுன் தாலிக்கொடி, 4 பவுனில் இரண்டு வளையல்கள், வைர கம்மல் 2 செட் ஆகியவை அப்படியே இருந்தன. உடனடியாக அந்த நகைகளை செல்வராஜ் காவல்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். இதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் ராசிபுரம் வந்தனர். 


அங்கு டிஎஸ்பி விஜயராகவன் முன்னிலையில் கலாதேவியிடம், பழைய பேப்பர் வியாபாரி செல்வராஜ் நகைகளை ஒப்படைத்தார். செல்வராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நேர்மையை பாராட்டிய கலாதேவி, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கி கவுரவித்தார்.  


இது தொடர்பாக நாம் ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவனிடம் பேசினோம்.


''கலாதேவி, வெளியூர் எங்கேயாவது செல்லும்போது நகைகளை பீரோவில் வைத்தால் திருடு போய்விடும் என்பதால், வீட்டு பாத்ரூமில் அடுக்க வைக்கப்பட்டிருந்த பழைய பேப்பர், நோட்டு புத்தக கட்டுகளில் ஒரு துணியில் நகைகளை போட்டு சுற்றி வைத்திருந்திருக்கிறார். அதையறியாமல் அவர் கடந்த 20ம் தேதியன்று மாலை 4 மணியளவில், பழைய பேப்பர்களை எடைக்குப் போட்டுள்ளார். அன்று இரவு 9 மணிக்குதான், அவர் பழைய பேப்பர் கட்டுகளுடன் நகைகளையும் எடைக்குப் போட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது. 


உடனடியாக அவர் ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மறுநாள் காலையிலேயே நாங்களும் அவரிடம் பழைய பேப்பர்களை எடைக்கு வாங்கிச் சென்றவர் செல்வராஜ் என்பதை கண்டுபிடித்து, அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவரும் பழைய பேப்பர்களுடன் நகைகளும் சேர்ந்து வந்திருப்பதை அறிந்து அதை தனியாக எடுத்து வைத்திருந்தார். யாராவது நகைகளை தேடி வந்தால் கொடுத்து விடலாம் என்று இருந்ததாகவும், இல்லாவிட்டால் அவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைக்க இருந்ததாகவும் சொன்னார். அவருடைய நேர்மையான செயல்பாட்டால்தான் நகைகளை பத்திரமாக மீட்க முடிந்தது,'' என்றார் டிஎஸ்பி விஜயராகவன்.


 

சார்ந்த செய்திகள்