நாமக்கல் அருகே, டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய் தாக்கிய சிறுவன் உயிரிழந்தான்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பப்பட்டியைச் சேர்ந்த சரவணன்- விமலா தம்பதியின் மகன் ஸ்ரீசங்கரன் (12). திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே திருப்பாய்துரையில் உள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்குச் சொந்தமான விடுதியில் தங்கி, சிறுவன் ஸ்ரீசங்கரன் 7- ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொண்டையில் திடீரென்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மருத்துவப் பரிசோதனையில் ஸ்ரீசங்கரனுக்கு டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். டிப்தீரியா நோய் என்பது பன்றி காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா போன்ற பாதிப்புகளைக் காட்டிலும் ஆபத்தானது என்றும் ஒரு வகை வைரஸ் கிருமி தாக்குதலால் இவ்வகை நோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, தொப்பப்பட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், டிப்தீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 7 குழந்தைகள் டிப்தீரியாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாமகிரிபேட்டை அருகே டிப்தீரியா தாக்கத்தால் சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
''குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டு மாதம், மூன்று மாதத்தில் ஐந்து நோய் தடுப்பூசி (தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான், இருமல், நிமோனியா, மஞ்சள் காமாலை) போட வேண்டும். அடுத்து, குழந்தைகளின் 16- வது மாதத்தில் இருந்து 24 மாதத்திற்குள் இதே நோய் தடுப்பூசி போட வேண்டும். மேலும், குழந்தைகளின் இரண்டாவது வயதின்போதும் இத்தடுப்பூசி போட வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்று பல பெற்றோர்கள் இத்தடுப்பூசிகளை போடாமல் தவிர்த்து விடுகின்றனர். இதனால் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து தொண்டை அழற்சி ஏற்படுகிறது,'' என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.