நாமக்கல் அருகே வீடு புகுந்து கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (27). நாமக்கல் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுடன் ஒரே வீட்டில் அனிதாவின் தந்தை கருப்பசாமியும் (50) வசித்து வருகிறார். நேற்று இரவு (அக்.14) காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், விமல்ராஜின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் விமல்ராஜ், அனிதா, அவருடைய தந்தை கருப்பசாமி ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், அனிதாவும், விமல்ராஜூம் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கருப்பசாமி மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாக போராடிக் கொண்டிருந்தார்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த கருப்பசாமிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. அனிதாவின் அண்ணன் அருண் (30). கோவையில் எலக்ட்ரீஷியன் வேலைகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். வார விடுமுறை நாள்களில் நாமக்கல் காமராஜர் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வார். நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நிக்கல்சனுக்கு சொந்த ஊர் சேலம் என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் நாமக்கல்லுக்கு குடியேறிவிட்டார். அங்கு பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில் எலக்ட்ரிகல் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தொழில் அடிப்படையில் நிக்கல்சனுக்கும், விமல்ராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக உருவெடுத்தது. இந்நிலையில் நேற்றும் அவர்கள் இருவரும் செல்போனிலும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் குடும்பத்தை ஒருவர் அழித்து விடுவதாக மாறி மாறி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான், நிக்கல்சன் மற்றும் அவருடைய கூட்டாளிகளும் அருணைத் தேடி காமராஜர் நகரில் உள்ள அனிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே அருண் இல்லாததால், ஆத்திரம் அடைந்த அவர்கள், அனிதா, விமல்ராஜ், கருப்பசாமி ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டி போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, அருணும் தலைமறைவாகி விட்டார். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அதேநேரம், அருணுக்கும் நிக்கல்சனின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததாகவும், சில நாள்களாக நிக்கல்சனின் மனைவியை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. தனது மனைவி மாயமானதற்கு அருண்தான் காரணம் எனக்கருதிய நிக்கல்சன் அவரை பழி வாங்கச்சென்றுள்ளார். வீட்டில் அவர் இல்லாததால் அருணின் தங்கை, கணவர் ஆகியோரை தீர்த்துக்கட்டியுள்ளார் என்றும் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுமட்டுமின்றி, அனிதாவும், அவருடைய கணவர் விமல்ராஜூம் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ஆரம்பத்தில் இருந்தே தங்கை அனிதாவின் திருமணத்தில் அருணுக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் அவரே ஆட்களை வைத்து தங்கையும், அவருடைய கணவரையும் தீர்த்துக்கட்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.