நாமக்கல் அருகே, அரசு அலுவலக இரவுக் காவலாளி ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், சின்ன அரியாகவுண்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (60). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இவர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். செப். 18ம் தேதி இரவு அவர் வழக்கம்போல் பணிக்கு வந்தார். அந்தப் பகுதியில் சில நாட்களாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அங்கிருந்த ஜே.சி.பி இயந்திர ஆப்ரேட்டருடன் அதிகாலை 2 மணி வரை பரமசிவம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள் கிழமை (செப். 19) அதிகாலை 5.30 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்தனர். அவர்கள், இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்த இரும்பு கம்பியில் பரமசிவம் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு திடுக்கிட்டனர். அவருடைய கால்கள் கயிறால் கட்டப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் பரமசிவத்தின் உடலை இரும்பு கம்பியோடு பிணைத்து கயிறால் கட்டியிருந்தனர்.
இதுகுறித்து அவர்கள் பரமசிவத்தின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால் பரமசிவத்தின் உறவினர்கள், ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பரமசிவத்தின் உடலை காணொளியாகவும், படமாகவும் எடுத்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். காட்டுத்தீ போல பரவிய இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தார். பரமசிவத்தின் உறவினர்கள் கூறுகையில், ''இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் உள்ளனர். அவ்வாறு இருக்கும்போது அரசு அலுவலகத்திலேயே ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியை கைது செய்யும் வரை சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்,'' என்றனர்.
மாவட்ட எஸ்.பி, அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளியை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன்பின் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் பரமசிவத்தை முதலில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள்.
பரமசிவத்திற்கும் வேறு யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? கடன் பிரச்சனையில் ஏதேனும் சிக்கி இருந்தாரா? குடும்பப் பின்னணி என காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை ஒட்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அவரிடம் கடைசியாக பேசிவிட்டுப் போன ஜேசிபி வாகன ஆபரேட்டரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அதிகாலை 2 மணிக்கு மேல்தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்பதால், அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது வந்து சென்றார்களா? என காவல்துறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.