ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்களின் மீது ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதியில் நடந்த சட்டக் கல்லூரி தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். காலையில் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் மாலை சென்னை திரும்பிய போது ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே எஸ்.பி.புரம் டோல்கேட் வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது காரில் பாஸ்டேக் இருந்தும் இயந்திரக் கோளாறால் பணம் கட்ட சொல்லி இருக்கிறார்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள்.
அதற்கு மாணவர்கள் மறுத்துள்ளனர். இதனால் வாக்குவாதத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். தமிழக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி விரட்டி தாக்கினர். மேலும் தமிழக மாணவர்கள் வந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. மாணவர்களுடன் வந்த உறவினர்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். காவல்துறையினர் முன்னிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டம், நெக்குந்தி பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் திடீரென சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், சாலையில் இருந்த சில வாகனங்கள் மீது ஏறி கோஷங்கள் எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 75 பேரைக் கைது செய்தனர்.