தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
மேலும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெரிதும் கவலையுற்றேன். அவர் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என விழைகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருத்தமுற்றேன்.அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வழக்கமான பொதுவாழ்வுப் பணிகளைத் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.