அரசு குடியிருப்பில் இருந்து கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் அவரை அக்குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து புது தகவல் வந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கடந்த சனிக்கிழமையன்று பல ஆண்டுகளாக தங்கியிருந்த சென்னை தியாகராயநகர் அரசு குடியிருப்பில் இருந்து வெளியேறினார். இதேபோல், தியாகி கக்கன் குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வந்தது. தமிழக அரசின் இந்த செயலுக்கு இளைஞர்கள்,அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் அனைத்து செய்தி சேனல்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசும் இரண்டு குடும்பத்தினருக்கும் வீடுகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் இந்த நடவடிக்கை பற்றி விசாரித்த போது, குடியிருப்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சி.ஐ.டி. காலனியில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2004-2005-ம் ஆண்டு இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், வீடுகளை இடித்துவிட்டு, ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்த வீட்டு வசதி வாரியம் முடிவு எடுத்துள்ளது. பின்பு அரசியலில் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளனர். அவர் தமது சொந்த செலவில் பழுதுகளை சரிசெய்தும், கதவு, ஜன்னல் மற்றும் தரை ஓடுகள் ஆகியவற்றை மாற்றம் செய்தும் குடியிருந்து வந்துள்ளார்.
வீடுகள் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால், 2011-ம் ஆண்டு வீட்டு வசதித் துறை அமைச்சரால் சட்டசபையில், 119 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்புதாரர் அனைவருக்கும் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்களை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், அரசிடம் இருந்து திட்ட ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறும் வரை குடியிருப்புகளை காலி செய்ய தடை விதித்து 30-11-2011 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, அரசாணை 5-3-2012 அன்று வெளியிடப்பட்டு, மீண்டும் குடியிருப்புதாரர்களுக்கு வீடுகளை காலி செய்ய 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து, பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் மீது விசாரணை செய்து, 25-7-2014 அன்று ஹைகோர்ட்டு 3 மாத காலக்கெடுவுக்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனைத் எதிர்த்து ஹைகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதுவும் 31-3-2015 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மீது தொடர்ந்து மேல்முறையீடு மனுவும், 5-2-2018 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கினையும், நிலுவையில் இருந்த வழக்குகளையும் ஒருங்கிணைத்து 5-2-2019 அன்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, குடியிருப்புதாரர்கள் வீடுகளை காலி செய்து வாரியத்திடம் ஒப்படைத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.