![ர்](http://image.nakkheeran.in/cdn/farfuture/d_O8hGBbZrpfrtJl0V_PGfBqFZ_NBOkiZcwEU4v1y2I/1537270352/sites/default/files/inline-images/raja_5.jpg)
எச்.ராஜாவை கைது செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள். நீதித்துறை பற்றிய விமர்சனத்தை நாங்களே முன்வந்து விசாரித்து வருகிறோம் என்றனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையையும், நீதித்துறையையும் எச்.ராஜா தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், எச்.ராஜா தரக்குறைவாக பேசப்பேச, ‘அண்ணாச்சி.... அண்ணாச்சி...’ என்று போலீசார் அவரை சமாதானப்படுத்துவர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம், போலீசாரே எச்.ராஜாவை அண்ணாச்சி என்று அழைப்பதால் ராஜா மீதான குற்றச்சாட்டில் முறையான போலீஸ் விசாரணை இருக்காது. ஆகவே, நீதிமன்றம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ’’எச்.ராஜாவை கைது செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள்.
நீதித்துறை பற்றிய விமர்சனத்தை நாங்களே முன்வந்து விசாரித்து வருகிறோம். மற்றபடி எச்.ராஜா மீது எந்த புகார் கூற விரும்புகிறீர்களோ அதை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள். நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள்’’ என்று அறிவுறுத்தினர்.