வாட்ஸ் ஆப் மூலம் உறவினர்களிடம் பேச முருகன், நளினி ஆகியோரை அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்தில் உள்ள மூத்த சகோதரியிடமும் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.
கடந்த வாரம் இயற்கை எய்திய தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.