நிர்மலா தேவி விவகாரம் குறித்த செய்திகளில் ஆளுநரை தொடர்புப்படுத்தி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிடுவதாகவும், அதனால் ஆளுநர் மனஉளைச்சல் ஏற்பட்டு பணி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் கூறி ஆளுநரின் செயலாளர், நக்கீரன் ஆசிரியர் மீது இந்திய தண்டனை சட்டம் 124ன் படி நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் நக்கீரன் ஆசிரியர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரெட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
பத்திரிகைகளில் செய்தி வெளியிடும்போது பாதிக்கப்பட்டவர்கள், அவதூறு வழக்குகள் தொடரலாமே தவிர, 124வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்வது பத்திரிகைகளை அச்சுறுத்தும் மோசமான முன்னுதாரணமாகும். இது பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளுக்கும், வழிமுறைகளுக்கும் எதிரானதாகவும் என்று கூறி நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிட்டார்.
போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, எழும்பூர் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரேட், நக்கீரன் ஆசிரியரை இ.த.ச. 124ன்படி கைது செய்வதற்கு போதுமான ஆவணங்களோ, முகாந்திரமோ இல்லை என்றும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் கூறி நக்கீரன் ஆசிரியரின் கைதை நிராகரித்து அவரை சிறைக்கு அனுப்பாமல் விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்தது.
நமது தரப்பில் வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், பி.குமரேசன், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அரசு தரப்பில் நக்கீரன் வழக்குகளுக்கான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இன்று (07.01.2019), நக்கீரன் ஆசிரியர் வழக்கில் சென்னை எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், சட்டத்தை கூர்ந்து பார்த்து அதன்படி உத்தரவு பிறப்பித்த 13வது மாஜிஸ்திரேட் பாராட்டுக்குரியவர் என்றும் சட்டத்தை அமல்படுத்தும் கீழமை நீதிமன்றங்களின் உத்தரவில் உயர்நீதிமன்றம் தேவையின்றி தலையிடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என்றும் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, வரும் காலங்களில் ஒரு நபரை கைது செய்யும்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், விதிமுறைகளையும் கூறி உத்தரவிட்டுள்ளார்.
இது பத்திரிகை சுதந்திரத்திற்கான தீர்ப்புகளில் மேலும் ஒரு மைல்கல் ஆகும்.