நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் திட்டச்சேரி பேருராட்சி, திருமருகல் ஒன்றியம் ஆகியவற்றில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை, அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருமருகல் ஒன்றியத்தில் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது சீயத்தமங்கையில் திட்டச்சேரி உதவி ஆய்வாளர் குமார், ராஜா, ஆயுதப் படை காவலர் சந்திரமோகன் உள்ளிட்டவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை சந்தித்து காவலர்களின் பணிகளை பாராட்டினார். குடும்பத்தினரை பார்க்காமல், விடுமுறை எடுக்காமல், இக்கட்டனா சூழ்நிலையில் தொடர்ச்சியாக சட்டம், ஒழுங்கு பணிகளை மேற்கொள்வதற்கு பாராட்டு என தெரிவித்தார்.
செல்லும் வழியில் கடும் வெயிலில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களையும் சந்தித்து உரையாடினார். அவர்களுடன் பிள்ளைகளும் நின்றிருந்ததை பார்த்துவிட்டு, தன் காரில் இருந்த வெள்ளரிக்காய், மற்றும் மோர், தயிர் பாக்கெட்டுகளை வழங்கினார்.
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுரக் குடிநீர் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்ட அவர், அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். கபசுரக் குடிநீரில் வெற்றிலை, எலுமிச்சை, சுக்கு, திப்பிலி உள்ளிட்ட சித்த மருந்து வேர்களை கலந்து தரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறு தயாரித்து ஜந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விநியோகிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.