திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் 16 ஒன்றியங்களுக்கு மட்டும்மே தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 10 ஒன்றிய சேர்மன் பதவிகளையும், அதிமுக 4 ஒன்றிய சேர்மன் பதவிகளையும், பாமக, காங்கிரஸ் தலா ஒன்று சேர்மன் பதவிகளை பிடித்துள்ளது. இன்னும் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் என இரண்டு ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் நடைபெறவில்லை.
இதுக்குறித்து விசாரித்தபோது, அதிமுக திட்டமிட்டே இந்த இரண்டு ஒன்றியங்களுக்கான தேர்தலை நடத்தவிடாமல் செய்தது. துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கவுன்சிலர்கள் அனைவரும் வந்த நிலையில் அதிமுக, பாமக கவுன்சிலர்கள் ஓட்டு போடாமல் வெளியே நின்றதால் தேர்தல் அதிகாரி தேர்தலை தள்ளிவைத்தார்.
அதேபோல் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 28 கவுன்சிலர்களில் திமுகவில் 14 கவுன்சிலர்களும், அதிமுகவில் 10 கவுன்சிலர்களும், சுயேட்சையாக 2 கவுன்சிலர்களும், அமமுகவில் 2 கவுன்சிலர்கள் என வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அதேநாளில் அமமுக கவுன்சிலர்கள் இருவர் திமுகவில் இணைந்துவிட்டனர். இதனால் இந்த ஒன்றியத்தில் திமுகவின் பலம் 16 கவுன்சிலர்களானது. மீதி 12 கவுன்சிலர்களே அதிமுக வசம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சேர்மன் மற்றும் துணை சேர்மன் தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் அதிகாரி வரவில்லை. அதேபோல் அதிமுக மற்றும் இரண்டு சுயேட்சை கவுன்சிலர்களும் அங்கு வரவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் மூலமாக இதுப்பற்றி கலெக்டர் கந்தசாமி கவனத்துக்கு விவகாரத்தை கொண்டு சென்றபோதும், அவர் கண்டுக்கொள்ளவில்லையாம்.
இப்படி இரண்டு ஒன்றியங்களின் தேர்தலை திட்டமிட்டே ஆளும்கட்சியான அதிமுக தடுக்கிறது. அதனை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் நினைத்திருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியும், விதிகளில் அதற்கு இடமுண்டு, ஆனால் அவர் நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.