நாகை அரசு மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த சுகாதாரத்துறை இணைச் செயலாளரைச் சூழ்ந்து, மருத்துவமனையில் நடைபெறும் லஞ்ச மற்றும் முறைகேடுகள் குறித்த சம்பவங்களைத் தடுக்கக் கோரி நோயாளிகளும், பொதுமக்களும் புகார் அளித்தனர்.
நாகை மாவட்டத்தின் பல இடங்களில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அஜய் யாதவ், நாகை ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டவர், கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அங்கிருந்த நோயாளிகளும் மற்றும் பொதுமக்களும் சுகாதாரத்துறை இணைச் செயலாளரைச் சூழ்ந்து, பல்வேறு புகார்களை முன் வைத்தனர். மருத்துவமனையில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன, அதனைத் தடுக்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கால தாமதம் இல்லாமல் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று ஆளாளுக்கு ஒவ்வொரு புகாரை வாசித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். அங்கிருந்தபடியே அதிகாரிகளை அழைத்துப் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.