கட்டடட சித்தாள் வேலை பார்த்துவந்த பெண் ஒருவரை வாயைப் பொத்தி கோவிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், நாகையை கலங்கடிக்கச் செய்துள்ளது. அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
நாகப்பட்டினம், வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான கவிதாவின் கணவர் வேதையன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்தச் சூழலில் குடும்ப வறுமையைப் போக்க கட்டட பணியில் சித்தாள் வேலை செய்துவருகிறார் கவிதா.
இந்நிலையில் நேற்று (08/01/2021) இரவு 9 மணிக்கு, நாகை வெளிப்பாளையம் அருகே, காமராஜர் காலனியில் குடியிருக்கும் அவரது சகோதரி வீட்டில் தங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியே பைக்கில் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் கவிதாவின் வாயைப் பொத்தி அருகே இருந்த விநாயகர் கோவிலுக்குத் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு 9 மணியில் இருந்து இரவு 2 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவது தெரிந்து, அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கவிதா நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார். அதனைத் தொடர்ந்து, நாகை வண்டிபேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ், அக்கரைகுளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இருவரையும் வெளிப்பாளையம் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மக்கள் புழக்கம் அதிகமுள்ள அந்தப் பகுதியில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
இதற்கிடையில், கூலி வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்ற பெண்ணை இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று, பின்னர் இருட்டில் அவரை மடக்கி கோவிலுக்குள் இழுத்துச் செல்லும் சி.சி.டி.வி. காட்சியும் தற்போது வெளியாகியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.