தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுவரும் நிலையில், நேற்று (26.03.2021) கடலூர் திட்டக்குடியில் உள்ள தனியார் கல்லூரில் ஜெ.பி.நட்டா தலைமையிலான பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு ஜெ.பி. நட்டா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்த தொகுதியில் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாகனங்களில் கொண்டுவரப்பட்டனர். ஆனால் 2.30 மணி ஆகியும் ஜெ.பி.நட்டா வராததால் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள் அவர் வருவதற்கு முன்பாகவே கலைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து தாமதமாக வந்த ஜெ.பி.நாட்டாவின் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு தொண்டர்களைக் கூவி அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் பாஜகவினர்.