நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட 4 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட வினோத் என்ற நபரிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் 2 பேர், அதேபோல் யூடியூப் பிரபலமான சாட்டை முருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாகச் சென்று பிரபாகரன் பற்றி இவ்வாறு இழிவாக பேசக்கூடாது எனக் கூறி, போலீசார் முன்னிலையிலேயே வினோத்திடம் பேசி மன்னிப்பு வீடியோ வெளியிட செய்துள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் இருவர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். "போலீசாரின் இந்த கைது நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது. நான்கு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பிரபாகரனைப் பற்றி இழிவாக பதிவிட்ட வினோத்திடம் புரிதல் ஏற்படுத்தி, போலீஸ் முன்னிலையில்தான் வீடியோ வெளியீடு செய்யப்பட்டது" என தெரிவித்துள்ளார்.