தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டம்வரை நாடகங்களில் நடித்து, அதன் பின் சினிமாவிற்குள் நடிகர்கள் வந்தனர். இந்தப் பழக்கம் இடையில் சிறிதுகாலம் இல்லாமல் இருந்தது. மீண்டும் தற்போது கூத்துப்பட்டறை மூலமாகவும் சினிமாவுக்குள் வரும் பாணி நடைமுறையில் இருக்கிறது. இந்தக் கூத்துப்பட்டறையில் மிக முக்கியமானவர் ந.முத்துசாமி. இவர், இன்று சென்னையில் காலமானார்.
இவரின் கூத்துப்பட்டறையில் இருந்துதான் நடிகர்கள் பசுபதி, விதார்த், கலைராணி, குருசோமசுந்தரம், தலைவாசல் விஜய், விஜய்சேதுபதி போன்ற மாபெரும் நடிகர்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்திருக்கிறார்கள். 2016-ல் வெளிவந்த ஆண்டவன் கட்டளை எனும் படத்தில் நாசர், நாடகப் பயிற்சியாளராக நடித்திருப்பார். அவரின் நடை, உடை, பாவனை எல்லாம் ந.முத்துசாமியை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். குறிப்பாக ந.முத்துசாமியின் மீசையும் ஆண்டவன் கட்டளை படத்தில் நாசரின் மீசையும் ஒரே தோற்றத்தில் இருக்கும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதே தெரிகிறது நாசர் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன் ந.முத்துசாமிதான் என்று. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி கணக்கு எழுதுபவராக நடித்திருப்பார். இவர் உண்மையில் கூத்துப்பட்டறையில் கணக்கு எழுதுபவராகத்தான் தன் பணியைத் தொடங்கினார். இன்று ந.முத்துசாமி மறைந்துவிட்டாலும் அவரிடம் நடிப்பு கற்றுக்கொண்ட நடிகர்களால் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பது எவராலும் மறுக்கமுடியாதது.