கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 'ஆபரேஷன் கஞ்சா' என்ற தலைப்பில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் நூதனமான முறைகளில் கஞ்சா கடத்துவது ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த நபர் ஒருவர் நூதனமான முறையில் தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் கஞ்சாவை விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்து அவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியின் குமரிமுனை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தின் வாயிலில் நின்ற, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் மார்க்கோனி என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பெங்களூரில் இருந்து தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் நூதன முறையில் கஞ்சாவை கடத்தி குமரி மாவட்டம் முழுவதும் அவர் விற்று வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜான் மார்க்கோனியிடம் இருந்து 95 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மார்க்கோனி மூலம் யாருக்கெல்லாம் கஞ்சா விற்கப்பட்டது என்பது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மார்க்கோனியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.