
நாகை அருகே சாராய வியாபாரி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக வட்டாட்சியர் தலைமையில் சடலத்தைத் தோண்டியெடுத்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே செருநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் கடந்த சில வருடங்களாகவே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சாராய வியாபாரியிடம், சாராயம் விற்றுத்தரும் வேலையைச் செய்துவந்துள்ளார். ஒருநாள் சாராயம் விற்ற பணத்தில் ஏதோ பிரச்சினை ஏற்படவே, மொத்த சாராய வியாபாரி தனது சகாக்களோடு ரவியை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அன்றிரவு ரவி வீட்டிற்குவந்து படுத்துள்ளார். ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், அவர் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்து படுத்திருக்கிறார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அவரது உடலில் அசைவில்லாததால் அவர் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரவி உயிரிழந்துகிடந்துள்ளார். அவரது சடலத்தை மறுநாள் (28ஆம் தேதி) மாலை செருநல்லூர் கீழத்தெருவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், ரவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ரவியின் உறவினரான எறும்புகன்னியைச் சேர்ந்த கண்ணதாசன், கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சந்தேக மரணம் என கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, இன்று (07.12.2021) புதைக்கப்பட்ட மயானத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதா முன்னிலையில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் ரவியின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.
"பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. நாகையிலிருந்து உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்," என்கிறார்கள் போலீசார்.