விழுப்புரம் மாவட்டம், காமராஜர் சாலையில் மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பு நேற்று மாலை ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய மூன்று நபர்கள், அஞ்சலகத்தில் உள்ளே சென்று அங்கிருந்த பெண் ஊழியரிடம், “2,000 ரூபாய் மணியார்டர் அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
அந்த ஊழியரோ, “மணியார்டர் அனுப்பும் நேரம் முடிந்து விட்டது. இனிமேல் நாளைதான் அனுப்பலாம் நாளைக்கு வாருங்கள்” என்று கூறியுள்ளார். உடனே அந்த மூன்று பேரும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஒன்று அந்தப் பெண் ஊழியரிடம் கொடுத்து அதற்கு சில்லரை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் ஊழியர், “தபால் நிலையத்தில் அலுவலகத்தின் உள்ளே உள்ள கருவூல பிரிவு உள்ளது. அங்கு சென்று அங்குள்ளவர்களிடம் சில்லரை வாங்கி கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி மூன்று நபர்களும் கருவூல பிரிவிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். அந்த ஊழியர் சில்லரை எடுத்துக் கொடுப்பதற்குள் அந்த ஊழியரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது மேஜை மீது இருந்த இரண்டு லட்சம் பணத்தை சில வினாடிகளில் திருடிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் ஏரி தப்பிச் சென்றுவிட்டனர்.
கருவூல அறையில் பணியிலிருந்த ஊழியர் சிறிது நேரத்தில் அந்த மேஜைமேல் இருந்த ரூ.2 லட்சம் பணம் களவாடப்பட்டது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து உடனடியாக விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் தபால்நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் தபால் நிலையத்திற்கு உள்ளே நுழைந்த அந்த மூன்று நபர்கள் யார் என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். பட்டப்பகலில் தலைமை தபால் நிலையத்திற்குள் புகுந்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நூதன முறையில் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.