வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் சிவா என்பவர் காளை மாடு வளர்த்து வருகிறார். இந்த காளை மாடு ஆந்திர மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பலமுறை வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது .
சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த காளை மாட்டின் காலில் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியதில் மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியான மாட்டின் உரிமையாளர் கண்ணீருடன் சென்று பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்ற காளை மாட்டின் காலில் கத்தியால் வெட்டிய சம்பவம் மாட்டின் உரிமையாளரிடம் சோகத்தையும் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்த வேறொரு காளை மாட்டின் உரிமையாளர்கள் இதை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்துவதோடு காளை மாட்டின் காலில் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக்கிட்டு போட்டியை சாதாரணமாக பார்க்காமல் வாயில்லா ஜீவனை வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாட்டின் உரிமையாளர் கோரிக்கை மட்டுமல்ல அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் உள்ளது.