திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிரிசமுத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 165 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகள் சிலர் பள்ளி முடிந்தும் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் மது அருந்தியும் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.
அடுத்த நாள் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பயில முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்குள் நுழைந்த சமூக விரோதிகள் நான்காம் வகுப்பு அறை முன்பு மது அருந்திவிட்டு மலம் கழித்து விட்டு சென்றுள்ளனர். இன்று பள்ளிக்கு வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் இதனைப்பார்த்தது முகச் சுழிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்பி தரக்கோரியும், இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் பள்ளிக்கு தூய்மை பணியாளர் இல்லாததால் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பகுதி மக்கள் சிலரை அழைத்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.