வீட்டை இடித்தால் பிள்ளைக்குட்டிகளோடு நாங்க எங்கே போவோம் என கேள்வி எழுப்பியபடி மயிலாப்பூரில் முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிரீன்வேஸ் சாலையின் அருகில் இளங்கோ நகரில் சுமார் 256 வீடுகள் ஆக்ரமிப்பில் உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வீடுகளை இடிக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து கடந்த 29 ஆம் தேதி வீடுகளை இடிப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பினர்.
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது 65 வயது மதிக்கதக்க கண்ணையா என்ற முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவரைக் காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பிரச்சனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சம்பந்தம் இருப்பதாகவும், அவரின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இருந்த வீடுகள் இடையூறாக இருந்ததாகவும், அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே இந்த வீடுகளை இடிக்க உத்தரவு வந்த போதிலும், அப்போதைய மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான நடராஜன் தடுத்து நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த தனிநபர் ஒருவருக்காகவே அப்புறப்படுத்தும் பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், "256 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் வேறு எங்கும் குடிபெயர்ந்து போக முடியாத கையறு நிலையில் உள்ளனர். வீட்டை விட்டுட்டு எங்க போவது? எங்க பிள்ளைகள் இங்குதான் படிக்கிறார்கள், நாங்கள் அமைதி வழியில்தான் போராடுகிறோம். முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளோம். கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்" என அப்பகுதியினர் கூறினர். "கடந்த 10 நாட்களாக குடியிருப்பு இடிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மயிலை த.வேலு சம்பவ இடத்திற்கு வந்து தங்களை நேரில் சந்தித்துப் பேசவில்லை" என்றும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இந்தநிலையில்தான் இன்று காலை தனது வீட்டை இடிப்பதை தாங்க முடியாத முதியவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.