வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் தனியார் சிமெண்ட் கலவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் தேவைக்காக ஏரி பகுதியில் இருந்து பெரிய போர்வெல் போட்டு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்துகிறது இந்நிறுவனம். இதனால் இங்குள்ள விவசாய கிணறுகளின் நீர் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு கிராம மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம்.
தொழிற்சாலையிலிருந்து வரும் தூசி மற்றும் புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாச நோய்கள் வந்துள்ளன. இதனால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது என பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனை கண்டித்து இப்பகுதி மக்கள் நவம்பர் 23ந்தேதி மதியம் சிமெண்ட் கலவைகளை ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்து போராடினர். காட்பாடி போலீஸார் உடனே சம்பவயிடத்துக்கு வந்து பொதுமக்களிடம் அந்த தொழிற்சாலை நிர்வாகத்திடம், வருவாய்த்துறை அதிகாரிகளை பேசி உங்கள் பிரச்சனையை தீர்க்கிறோம் என வாக்குறுதி தந்து போராட்டத்தை கைவிட வைத்துள்ளனர்.