இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல் எழுத்தாளராக இருந்து வருகிறார். மேலும் அவருக்கு சமீபத்தில் எம்.ஜி.ஆர். பாடல்கள் குறித்து ஆய்வு செய்ததற்காக முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் மேகலா சித்ரவேல் பட்டம் வாங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர், "வெற்றிமாறன் தான் என்னுடைய 4 வருடப் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டான். பெண்கள் எந்த வயதிலும் சாதனை செய்வார்கள். அதற்கு வயது ஒரு தடை கிடையாது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், வெற்றிமாறனின் தாய் பட்டம் பெற்றது போலவே கரூர் மாவட்டத்திலும் 51 வயது தாய் நீண்ட ஆண்டுகளுக்கு பின் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதும், இதற்கு தனது மகன்தான் காரணமென அந்தத் தாய் பேசியிருப்பதும் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகீலா பானு (51). இவர் 1989 ஆம் ஆண்டில் 9 ஆம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். அதன்பின் இவருக்கு திருமணமான காரணத்தினால் இவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. மேலும், இவர் கடந்த 12 ஆண்டுகளாக கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பூவம்பாடி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் சத்துணவு அமைப்பாளராக முடியும் என்ற நிலை இருந்துள்ளது. அதனால், கடந்த மாதம் நடந்த 10 ஆம் வகுப்பு தனித்தேர்வில் 5 பாடங்களுக்கு தேர்வு எழுதியிருந்தார். அந்த தேர்வில் ஆங்கிலம் மற்றும் வரலாறு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ், அறிவியல், கணக்கு பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த அறிவியல் பாடத்திற்கான தேர்வை கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் ராகீலா பானு தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு எழுதி முடித்து வந்த ராகீலா பானு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக எனது மகன் சாகுல் அமீது எனக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து வருகிறார். வீட்டில் வேலைகளை செய்துகொண்டே 10 ஆம் வகுப்புக்கான பாடங்களைப் படித்து வருகிறேன். மேலும் இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்று கூறினார்.