Skip to main content

‘என் மண்; என் தேசம்’ - ஒற்றுமைக்கான நிகழ்ச்சியில் வேற்றுமை?

Published on 18/10/2023 | Edited on 19/10/2023

 

இந்திய ஒற்றுமைக்காக நாடு முழுவதும் கலசங்களில் மண் சேகரிக்கப்பட்டு, தேசிய ஒருமைப்பாட்டுத் தோட்டம் டெல்லியில் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேரு யுவகேந்திரா, இந்திய அஞ்சல்துறை, பிரபஞ்சம் அறக்கட்டளை இணைந்து நடத்தியது.

 

'எனது மண்; எனது தேசம்' அமுத கலச யாத்திரை, பொன்னமராவதி ஒன்றிய அளவில்  நடைபெற்றது. இதற்கு மண் சேகரிக்கும் நிகழ்ச்சியில் பொன்னமராவதியில் இருந்து அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொன்னமராவதி சேங்கை ஊரணியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக நடந்து வந்து தேனம்மாள் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டு, பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா முருகேசன் தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நிலையில், தனியார்ப் பள்ளி மாணவ - மாணவிகளை நாற்காலிகளில் அமர வைத்தனர். தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளை மண்டபத்தின் தரையில் அமர வைத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட விழாவில் அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி மாணவ - மாணவிகளைப் பிரித்துத் தரையிலும் நாற்காலியிலும் அமர வைத்திருந்தது பெரிய வேற்றுமையைக் காட்டியது. இந்த கேள்வி அங்கே எழுந்தபோது, சேர்கள் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்களைத் தரையில் அமர வைத்ததாகக் கூறுகின்றனர் அதிகாரிகள். இந்த நிகழ்ச்சிக்கு எத்தனை மாணவர்கள் வருவார்கள் என்பதைக் கணக்கிடாமலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பார்கள்? தனியார்ப் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் ஏன் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரப்படவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்