2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று (20/11/2021) மாலை 05.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கேப்டன் மகேந்திர சிங் டோனி, "சி.எஸ்.கே. அணிக்கான ரசிகர் பட்டாளம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் விரிவடைய வேண்டும். எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அடுத்த ஆண்டாக இருந்தாலும், 5 ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில்தான் கடைசி டி20 போட்டி. வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் பல்வேறு மாநிலங்களில் கடந்து வந்துள்ளேன். எந்த நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர்.
சென்னை மிகச்சிறந்த நினைவுகளை எனக்கு தந்துள்ளது. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம். 2008-ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னைத் தேர்வு செய்வார்கள் என நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் சி.எஸ்.கே. சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது அதிகம் பேசப்பட்ட அணியாக சி.எஸ்.கே. இருந்தது" எனத் தெரிவித்தார்.