
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நாஞ்சில் சம்பத் இனி ஆர்.ஜே.பாலாஜியுடன் பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆர்.ஜே.பாலாஜி அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரவிய தகவலை அடுத்து கடந்த 12ம் தேதி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கட்சி கொடியை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் இனி தான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில்,
சிறிது காலம் அனைத்திலிருந்தும் விலகியிருந்த நான் அருமைத் தம்பி ஆர்.ஜே.பாலாஜியின் புதிய பயணத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தம் புதிய இளைஞர்களுடன் கைகோர்த்து ஆவலுடன் பணியாற்ற காத்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.