கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள நாலாந்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா ( 48). இவர் சிதம்பரம் அரசு போக்குவரத்து கிளையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயகாந்தி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
![cuddalore man drowned in river](http://image.nakkheeran.in/cdn/farfuture/gnyTlRZhGj9s7BL-ziEUS2vjO2I9BetDEC9dAH1vTqw/1574653599/sites/default/files/inline-images/dfgdfg.jpg)
ஞாயிறன்று ஜீவா தனது மகன்கள் 2 பேரையும் அழைத்துகொண்டு அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். வெள்ளாற்றில் தண்ணீரில் ஜீவாவின் 2 மகன்களும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் இருந்த புதைகுழியில் ஜீவாவின் 2 மகன்களும் சிக்கி, காப்பாற்ற கூறி கூச்சலிட்டுள்ளனர். மகன்களின் அலறல் சத்தம் கேட்டு குளித்துக் கொண்டிருந்த ஜீவா வேகமாக சென்று 2 மகன்களையும் மீட்டார். ஆனால் அவர் புதைக்குழியிலிருந்து வெளியே வரமுடியாமல் மாட்டிக் கொண்டார். சிறிதுநேரத்தில் அவர் புதைகுழியில் சிக்கி தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார். கரையில் நின்ற 2 மகன்களும் தங்களின் தந்தை தண்ணீரில் மூழ்கியதை அறிந்ததும் ஊருக்குள் ஓடி சென்று அங்கு இருந்தவர்களிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளனர். இதனையொடுத்து பொதுமக்கள் வெள்ளாற்று பகுதிக்கு ஓடி சென்று புதைக்குழியில் சிக்கி உயிரிழந்த ஜீவாவின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து புவனகிரி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.