Skip to main content

’என் குழந்தைகள் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார்கள்’- அரசுப்பள்ளி விழாவில் சமக்ரா சிக்ஷா இணை இயக்குநர் பொன்னையன் பேச்சு

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
ss


    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த சில வருடங்களாக பெற்றோர்கள், கிராம மக்களின் உதவியுடன் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரங்கசாமி (ஓய்வு ஆசிரியர்) குடும்பத்தினரின் உதவியுடன் அறிவுத்திறன் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் (பொ) திராவிடச்செல்வம் தலைமையில், திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் உமாதேவி, மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், அரங்கசாமி (ஓய்வு ஆசிரியர்), ஆசிரியர் சதீஷ்குமார் ஆகியோர்  முன்னிலையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமக்ரா சிக்ஷா இணை இயக்குநர் பொன்னையன் வகுப்பறையை திறந்து வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை சந்திரா வரவேற்றார். உதவி ஆசிரியை வினோ நன்றி கூறினார்.


    
அறிவுத்திறன் வகுப்பறையை திறந்து வைத்த சமக்ரா சிக்ஷா இணை இயக்குநர் பொன்னையன் பேசும் போது.. இந்த கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல  கிராம மக்கள் வேன் வசதி செய்து கொடுத்து ஆங்கிலம், கணினி உள்ளிட்ட வகுப்புகளுக்கு கூடுதல் ஆசிரியர்களையும் நியமனம் செய்திருப்பதுடன் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இந்த பகுதி மக்கள் தொடக்கத்தில் அதிகம் படித்து வேலைக்கு சென்றிருந்தால் அரசுப்பள்ளியைவிட தனியார் பள்ளியை தான் அதிகம் நாடி இருப்பார்கள். தங்கள் குழந்தைகள் தங்களைவிட அதிகம் படிக்க வெண்டும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. அந்த ஆசை எனக்கும் உண்டு. என் பெற்றோர் கையெழுத்துகூட போடத் தெரியாமல் இருந்ததால் என்னை அரசு பள்ளியில் படிக்கவைத்தார்கள். நான் படித்து வேலைக்கு சென்றதால் என்னைவிட அதிகமாக படித்து ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று நான் என் குழந்தைகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். ஆனால் இந்த ஊர் குழந்தைகளுக்கு அப்படி ஒரு நிலை இல்லை. அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட தமிழ், ஆங்கில வார்த்தைகளை படிக்க தெரிந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

 

ss


    
இந்த பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி சதுரங்கம் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக சாதித்து வருகிறார்கள் என்றார்கள். சதுரங்கத்தில் சாதிக்கும் மாணவர்களுக்கு அறிவுத் திறன் அதிகமாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி விளையாடும் விளையாட்டு சதுரங்கம். ஆகவே தான் வட்டார கல்வி அலுவலர் உமாதேவி சொன்னது போல இந்த பகுதி  மாணவர்களால் கல்வியிலும்,  போட்டித் தேர்வுகளிலும் சாதிக்க முடிகிறது. முடிந்தால் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் கற்றுக் கொடுக்க பெற்றோர்கள் ஆசிரியர்களை நியமித்தால் நல்லது. 

 

வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது இந்தி பெரிய தடையாக உள்ளது. தற்போது இந்திய அதிகம் படிக்கும் மாநில தமிழ்நாடு தான். மாணவர்களை படிப்பு என்பதை மட்டும் புகுத்துவதைவிட அவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஒவ்வொரு மாணவனையும் சாதிக்க தூண்ட வேண்டும். ஒரு மாணவன் எதற்கும் சரிப்படமாட்டான் என்று வேறுபாடுகளை இங்கே காட்டக் கூடாது. அதனால் அந்த மாணவன் மனநிலை பாதிக்கப்படும். அவனால் எதில் சாதிக்க முடியும் என்று கண்டறிந்து அதில் சாதிக்க தூண்ட வேண்டும். அறிவியல், கணக்கு, விளையாட்டு எல்லாவற்றிலும் சாதிக்க தூண்ட வேண்டும். அபாக்ரஸ் திட்டம் நன்றாக உள்ளது மாணவர்களை எளிதில் புரிந்து கொள்ள வைக்கிறது. அதை பயன்படுத்தலாம். துணையாக கிராம மக்கள் இருப்பதால் ஆசிரியர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.


            

சார்ந்த செய்திகள்