ராமநாதபுரம் மாவட்டத்தின் பசும்பொன் நகரில் நாளை முத்துராமலிங்கத் தேவரின் 113வது குரு பூஜை விழா நடக்கிறது. தலைவர்கள் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கூட்டம் விழாவுக்குச் செல்வதில் அதிகமிருப்பதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதன்படியே அவர்களும் நிகழ்ச்சிகளுக்குக் கடந்த வருடம் வரை சென்று வருவது நடைமுறையாக இருந்திருக்கிறது.
தற்போது கரோனா தொற்றுயுகம் என்பதால் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பசும்பொன் செல்வதற்கான நடைமுறைகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் அரசால் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார், நாளை பசும்பொன்னில் நடக்கிற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிக்கு மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து செல்வதற்கு அனுமதி கிடையாது என அறிவித்திருக்கிறார்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாக்குச் செல்பவர்கள் 5 பேருக்கு மிகாமல் அவர்கள் சார்ந்த அமைப்பின் தலைவர்கள், பிரதிநிதிகளிடம் அனுமதிக் கடிதம் பெற்று விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டரால் பரிசீலிக்கப்பட்டு அவரது நேரப் பட்டியலின்படியே உரிய நேரத்தில் அஞ்சலி செய்ய வேண்டும்.
மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திவிழா பாதுகாப்பை முன்னிட்டு மாவட்டத்தின் எல்லைகளில் 15 வகையான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுத் தணிக்கைகளின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். இதன் பொருட்டு கூடுதல் எஸ்.பி.யின் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 125 எஸ்.ஐ.க்கள், 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மாவட்டத்தில் தலைவர்கள் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தும் வகையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலம் செல்லவும், முளைப்பாரி, பால்குடம் எடுத்தல், பட்டாசு வெடித்தல் போன்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார் எஸ்.பி. ஜெயக்குமார்.