Skip to main content

20 லட்சம் பேருக்கு உணவு வழங்க திமுக தொடங்கிய திட்டம்! ஸ்டாலின் கலந்துரையாடல்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 DMK plan to provide food for 20 lakhs people

 

திராவிட முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற, பல மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் ஆலோசகராக இருந்த, குறிப்பாக தற்போது பிரதமராக உள்ள பாஜக மோடியின் தேர்தல் ஆலோசகராக, இருந்த ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோரை, தங்களது கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்க நியமித்துள்ளது திமுக தலைமை.


அவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் கரோனா நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் மக்களோடு மக்களாக திமுக நிற்கவேண்டும், உதவ வேண்டும் என ஐபேக் நிறுவனம் ஒரு திட்டத்தினை வகுத்து தந்துள்ளது.

“ஒன்றிணைவோம் வா” என்கிற முழக்கத்தோடு முன்னெடுகப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, துன்பத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு முயற்சி, ஏப்ரல் 20 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி உதவி எண்ணை திமுக தலைமை அறிவித்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டால் உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உதவி மையம் (90730 90730) மூலம் உதவி கோரியுள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேருக்கு உதவி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 29ந்தேதி, “நல்லோர் கூடம் முன்முயற்சியை” என்கிற திட்டத்தை திமுக தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது உதவி வழங்குபவர்களுடன் உதவி கோருபவர்களை இணைப்பதற்கான ஒரு மெய்நிகர் மன்றம், நல்லோர் கூடம், தனிநபர்கள், https://ondrinaivomvaa.in/nallorkoodam/ என்ற தளத்தில் நேரம், வளங்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் வட்டாரத்தில் உதவ பதிவு செய்யலாம். அவர்களுக்கு தேவை உள்ளவர்கள் பற்றிய பட்டியல் தந்து உதவி செய்யவைப்பது.

நல்லோர் கூடம் என்கிற மன்றத்தில் இணைந்த தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதல் குழுவுடன், திமுக தலைவர் உரையாடினார். உரையாடலின்போது, தன்னார்வலர்களின் இரக்கமும் உறுதியும் ஒரு நெருக்கடியை நாம் ஒன்றாக சமாளிப்போம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

அதேபோல், ‘ஏழை எளியோருக்கு உணவு’ (Feed the Poor) ‘என்ற திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இது உடனடியாக உணவு தேவைப்படும் மக்களுக்கு, உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் திமுக தலைவர்கள், சமையலறைகள் மற்றும் அடிமட்ட உணவளிக்கும் கூட்டாளர்களின் நெட்வொர்க் மூலம் மாநிலத்தின் 25 நகரங்களில் 20 லட்சம் சமைத்த சத்தான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த செயல்பாடுகளை ஆளும்கட்சியும், பிற கட்சிகளும் உற்று நோக்க துவங்கியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்