Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரமில்லாத ஆணையம்- முத்தரசன் சாடல்!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரமே இல்லாத வெற்று ஆணையமாக இருந்துவருகிறது என சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

 

mutharasan


திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், "தமிழகம் இதுவரை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துவருகிறது.  இந்த அரசால் மக்கள் விலை கொடுத்தாலும் கிடைக்காத பொருளாக தண்ணீர் மாறிவிட்டது. போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய தமிழக அரசு கோயில்களில் யாகம், வேள்விகளை நடத்தி மக்களை கடுப்பேற்றிவருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரமே இல்லாத ஆணையமாக இருந்து வருகிறது. கடந்த ஜூன் ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்துவிடத கர்நாட அரசின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கடமைக்காகவும், கண்துடைப்புக்காகவுமே மாதந்தோறும் காவிரி ஆணையம் கூட்டத்தை நடத்தி வருகிறது.

காவிரியில் தண்ணீர் கிடைக்காமல் எட்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. அதனால் உற்பத்தி இழப்பு மட்டுமின்றி கூலி விவசாயிகளுக்குமான வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பொருளாதார நெருக்கடியில் கிராமப்புற மக்கள் சூழ்ந்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த பொருளாதார இழப்பை ஈடுசெய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டிவருகிறது. இந்த திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தீவிரமாக தொடரும். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மக்களுக்கு எதிரான இந்தித்திணிப்பை கையில் எடுத்துள்ளது. இப்போது அனைத்து கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று பல்கலைகழக குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக கண்டிக்கிறது. இதை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்." என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்