முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளைக் கொள்ளையடித்த 6 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளையில் நேற்று (22/01/2021) காலை ஹெல்மெட், முகமூடி அணிந்தவாறு அலுவலகத்திற்கு நுழைந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல், அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சாவியை வாங்கி லாக்கரில் இருந்த சுமார் 12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளையும், ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களைத் தேடி வந்த நிலையில், இன்று (23/01/2021) காலை ஹைதராபாத் அருகே உள்ள சம்சாத்பூரில் ஆறு பேரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்திகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆறு பேரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை அதிரடியாக கைதுச் செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழக முதல்வரும் காவல்துறைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.