முத்தூட் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 22- ஆம் தேதி ஓசூரில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளை ஒன்றில், துப்பாக்கி முனையில் ரூபாய் 12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதேபோல், கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினரின் உதவியுடன் ஹைதராபாத்துக்கு அருகே கொள்ளையர்களைச் சுற்றி வளைத்துத் தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பின்பு, கொள்ளையர்களை ஓசூருக்கு அழைத்து வந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். 10 நாள் போலீஸ் காவலில் வைத்து, காவல்துறையினர் விசாரித்த நிலையில், கொள்ளையர்களை இன்று (06/02/2021) மீண்டும் ஓசூர் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, கொள்ளையர்களை பிப்ரவரி 20- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.