இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றுமே சிறந்தது.. நகரில், சாலையோரங்களில் மருத்துவமனை வளாகங்களில் நின்ற உயிர் மரங்களை வெட்டி விற்றுவிட்டு பல லட்சங்களை செலவு செய்து செயற்கையாய் சிமெண்டால் மரங்களை உருவாக்கி நகரை அழகுபடுத்தி பார்க்கும் புதுக்கோட்டை நகராட்சியின் நிலையை பார்த்து இயற்கை ஆர்வலர்கள் கோபம் கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கோடிக்கணக்காண மரங்களை சாய்த்தது கஜா புயல்.புதுக்கோட்டை நகரில் மட்டும்கஜா புயலுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை அந்ததந்த பகுதி இளைஞர்களே சீரமைத்து வழிகளை ஏற்படுத்தினார்கள். அதேநேரத்தில் சாய்ந்த மரங்களை அகற்றுவதாக சொல்லி அதிமுகவினரும், அவர்களின் அடிபொடிகளும் புயலுக்கு தப்பிப்பிழைத்த உயிர் மரங்களையும் வெட்டி அகற்றினார்கள்.
ராணியார் மருத்துவமனை வளாகத்தில் பல உயிர் மரங்கள் அகற்றப்பட்டது. இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை மட்டும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரங்களை நட்டு மீண்டும் புணரமைத்து வருகிறது. அதைத்தாண்டி மரங்களின் காதலர்கள் வீடு வீடாக மரக்கன்றுகளை நடுவதுடன் விழாக்களில் கன்று கொடுப்பது என்று பல்வேறு பெயர்களில் குழு குழுவாக சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றர். ஆனால் பசுமை புதுகை என்று அழகான வாக்கியத்தை வைத்து பெருமை அடித்துக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சி எங்குமே ஒரு சில மரக்கன்றுகள் கூட நட்டதில்லை.
ஆனால் பூங்கா என்ற பெயரில் புதுக்குளம் வடக்கு கரை பகுதியில் சுமார் ஒரு கோடி செலவு செய்தது. அதேபோல பெரியார் நகர் ராஜகோபாலபுரம், தண்ணீர் தொட்டி அருகில் அடப்பன் வயல், அடப்பன் குளம் அருகில் மறைமலைநகர் என பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைத்த ஒரு சில மாதங்களுக்கு பிறகு பூங்கா இருந்த சுவடே இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் காணாமல் போனது. பல்வேறு பெயர்களில் கொடுக்கப்பட்ட அரசின் நிதி வீணடிக்கப்பட்டது. தரம் குறைந்த பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட காந்தி பூங்கா மட்டும் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதனையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டதால் அங்கேயும் கட்டணக் கொள்ளை. அதையும் இந்த நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
இந்த காந்தி பூங்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவின் நுழைவாயில் கதவு விழுந்து ஒரு சிறுமி பலியானார். அப்போதைக்கு பரபரப்பானது.. இந்த நிலையில் தான் மீண்டும் பூங்கா என்ற பெயரில் பேருந்து நிலையம் அருகில் மகளிர் கல்லூரி சாலையில் பெரிய மரம் உடைந்திருப்பது போல அமைத்து அதில் குழந்தைகள் சறுக்கி விளையாட அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா எத்தனை நாளைக்கோ..
பூங்கா என்ற பெயரில் அரசின் நிதியை வீணாக்காமல் நகராட்சியின் முன்பகுதி தெற்கு 4 புதிய பேருந்து நிலையம் திலகர் திடல், மன்னர் கல்லூரி சாலை, ஆலங்குடி சாலை என நகரின் அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் முறையாக மரங்களை நட்டு கூண்டுகளை அமைப்பு பராமரித்தால் புதுக்கோட்டை நகரம் பசுமை புதுகையாகவும் எதிர்கால மக்களின் நலனுக்காகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதில் நிதி மோசடி செய்ய முடியாதோ என்ற நிலையில் நகராட்சி இதை கவனத்தில் கொள்ளுமா? என்கிறார்கள் நகர மக்கள்.