அடையார் கேட் ஓட்டல் ஒரு பகுதி சொத்துவரியையாவது செலுத்தாவிட்டால் மாநகராட்சி நடவடிக்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடையார் கேட் நட்சத்திர ஓட்டல், கடந்த 2010, 2011ம் ஆண்டுக்களுக்கான 24,38,76,287 ரூபாய் சொத்து வரியை செலுத்தவில்லை என ஓட்டல் நுழைவாயிலில் கடந்த மார்ச் 20ஆம் தேதி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. அத்துடன் அடையாறு கேட் ஓட்டல் சொத்து வரி செலுத்தவில்லை என்று தண்டாரோ போட்டும் தெரிவித்தனர்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரியும், சொத்துவரி தொடர்பாக தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி அடையார் கேட் ஓட்டல் இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கு நீதிபதி எம். துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஓட்டல் முன் மாநகராட்சி அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர், இதனால் விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு பெறும் பாதிப்பு ஏற்படுகிறது, ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களும் விடுதியில் தங்கியுள்ளனர், முதல் கட்டமாக 5 கோடி மட்டும் கட்ட தயராக இருப்பதாகவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. அறைகளின் எண்ணிக்கையில் கணக்கிடாமல், மொத்த கட்டிடத்தின் அடிப்படையில் வரி கணக்கிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிநார்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, சொத்துவரி நிர்ணயிப்பது தொடர்பான நடைமுறைகளுக்கான அரசாணை பிறப்பிக்கும்போது ஓட்டல் சங்கங்களிடம் கருத்து கேட்டுதான் பிறப்பிக்கப்பட்டது, அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விதிகளை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு இவர்கள் ஆஜராகவில்லை என தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி "மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர், இந்நிலையில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது, எனவே குறைந்தபட்சமாக 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் மாநகராட்சி நடவடிக்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.24 கோடி ரூபாய் நிலுவையில்,10 கோடி ரூபாயை எப்போது செலுத்த முடியும் என்பது குறித்து அடையார் கேட் ஹோட்டல் நிர்வாகம் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.