"நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 77 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். காய்சலுக்காக பொதுமக்கள் யாரும் தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டாம்" என நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கலா கூறியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், போதுமான படுக்கை வசதிகள் இல்லாத நிலையில் வராண்டா மற்றும் கூடுதல் அறைகள் ஒதுக்கப்பட்டும் நோயாளிகளை மருத்துவர்கள் கண்காணித்து வருவதால், சமாளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் டெங்கு காய்ச்சலால் இறந்துபோனார். மக்களை காக்காத அரசை கண்டித்து பொதுமக்களும், ஆசிரியையின் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கலா பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறுகையில்," கடந்த அக்டோபர் மாதம் 25,680 பேர் வெளி நோயாளிகளாகவும், 6664 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று இவர்களில் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 8000 க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், சுமார் 3000க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தியுள்ளோம் கூடுதல் இரசாயன வேதி பொருட்கள் உள்ளிட்ட அதி நவீன உபகரணங்கள் கூடுதலாக தமிழக அரசால் நாகை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வரவேண்டும்," என அவர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த சிலமாதங்களாகவே பாதாளசாக்கடை அங்காங்கே உடைந்தும், வழிந்தும் சாக்கடையாக தெருக்களிலும், சாலைகளிலும் ஓடுகிறது, அவற்றில் இருந்து தூர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நடமாடவே முடியாமல் திணறடித்துவருகிறது, அப்படி பாதாளசாக்கடை உள்வாங்கி சாக்கடை வழிந்தோடிய தெருவில் குடியிருந்த ஆசிரியைதான் தற்போது டெங்குகாய்ச்சலால் பலியாகியுள்ளார் அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்கின்றனர்.
இதற்கிடையில் மயிலாடுதுறை நகராட்சியின் அவலத்தைக் கண்டித்து மெரினா புரட்சிபோல போராட்டம் நடத்த திட்டமிட்டு நோட்டீஸ் வினியோகித்தும், வாட்சாப்,பேஸ்புக் மூலமும் கொடுத்துவருகின்றனர்.