தாமிரபரணி தண்ணீரை குடிநீர் தேவைக்குபோக மீதமிருந்தால் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு வழங்கவேண்டும் என திமுக எஸ்.ஜோயல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் 46ஆயிரத்து 107ஏக்கர் விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றது. இந்த விவசாய நிலங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்று தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதிலிருந்து தினசரி தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தினை கடந்த 2011ம் ஆண்டுமுதல் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம். இதனை தடுத்திடும் நோக்கில், மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கத்தில் ''ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும்'' என தி.மு.க.வின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல் பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த பொதுநல வழக்கில் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் கடந்த 28.11.2018 அன்று ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்ககூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும்'' என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் மாண்புமிகு., உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே இடைக்கால உத்தரவு வழங்கிய நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. திமுக எஸ்.ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர் திருமதி.அனிதா செனாய் ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் விசாரணையின் முடிவில், ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு போக தண்ணீர் மீதமிருந்தால் மட்டுமே 20எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட மற்ற தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கவேண்டும், குடிநீர் தேவைக்குமேல் தண்ணீர் இல்லாவிட்டால் எக்காரணம் கொண்டும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்ககூடாது என்று நிபந்தனையுடன் கூடிய உத்தரவினை பிறப்பித்துள்ளனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் இதர அரசுத்துறையினர் கலந்தாலோசித்து அதன்அடிப்படையில் குடிநீருக்கு போக தாமிரபரணி தண்ணீர் மீதம் இருந்தால் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு வழங்கவேண்டும். அதோடு 15நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழுவினர் அணையின் தண்ணீர் இருப்பை தவறாமல் கண்காணித்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினர், 20எம்.ஜி.டி திட்டத்திற்கு தமிழக அரசு எங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூற, தமிழக அரசு சார்பில் அரசுத்துறை அதிகாரிகள் இதுதொடர்பான விண்ணப்பித்தினை ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி விட்டதாக தெரிவிக்க, வனத்துறை அமைச்சகம் இதுவரை இதுதொடர்பான விண்ணப்பம் தங்களுக்கு இதுவரை வரவில்லை என்று பதில் அளித்தனர். இதனைக்கேட்ட நீதிபதிகள், இன்னும் 3வார காலத்திற்குள் தமிழக அரசு 20எம்.ஜி.டி திட்டத்திற்கு அனுமதி பெறுவது தொடர்பான விண்ணப்பித்தினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திடவேண்டும். இந்த விண்ணப்பதின் பேரில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ''ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் எடுப்பதற்கு சட்டவிதிமுறைகளின்படி வழிமுறை இருந்தால் மட்டுமே தண்ணீர் எடுப்பதற்கான உத்தரவினை இரண்டுவார காலத்திற்குள் அளித்திடவேண்டும்'' என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயலிடம் கேட்டபோது, ''பலவருட காலமாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் வேதனையில் வாழ்ந்து வரும் விவசாயப்பெருங்குடி மக்களின் துயர் துடைக்கவும், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினர் இயற்கையோடு வளமாக வாழ்வதற்கும் எங்கள் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இதற்கு நிரத்தர தீர்வு கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாங்கள் இறுதிவரை தொடர்ந்து போராடுவோம்'' என்று உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர். இதனால் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.