கரோனா ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முல்லை பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முல்லைப்பூ வியாபாரிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வேதாரண்யம் வட்டத்தில் கருப்பன்குளம், ஆதனூர், கோவில்தாவு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். முல்லைப் பூக்களை செடியில் இருந்து பறிக்காமல் விட்டால் செடிகள் வீணாகிவிடும் என்பதால் கிலோவிற்கு 50 ரூபாய் கொடுத்து பூக்களைப் பறித்து கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.