தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து நேஷனல் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டு விளையாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார்.
இந்த சூழலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பியும் கருப்பு கொடி ஏந்தியும் திருவனைக்காவல் பகுதியில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறார், தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார், திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவிக்கிறார் என என குற்றம்சாட்டியும், கண்டனங்களை எழுப்பியும் கருப்புக் கொடியுடன் சாலையின் ஓரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாலையின் நடுவே சென்று பேருந்துகளையும், வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.