கடலூர் - அரியலூர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இடமான பெண்ணாடம் அருகிலுள்ளது வெள்ளாறு. இந்த ஆறு சௌந்தர சோழபுரத்திற்கும் கோட்டைக்காடு ஆகிய இரு ஊர்களுக்கும் இடையே ஓடுகிறது. இதில், மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, அரசு 12 கோடியே 60 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து, மேம்பாலக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பாலத்தின் பணிகள் மிக மெதுவாக நடந்து வருகிறது. இதனால், கட்டுமானப் பணி நடைபெறும் அருகில் ஆற்றைக் கடப்பதற்காக, தற்காலிகத் தரைப் பாலம் அமைத்து, போக்குவரத்து மேற்கொண்டு வந்தனர். தற்போது பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்தத் தற்காலிகத் தரைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால், அந்த வழியாகச் செல்லும் 2 மாவட்ட கிராம மக்கள், சுமார் 15 கிலோமீட்டர் அளவுக்குச் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தற்காலிகத் தரைப்பாலம் மழைக்காலத்தின் போது அடித்துச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.
அதற்கு, நிரந்தரத் தீர்வாகத்தான் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால், அந்தக் கட்டுமானப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் பணிகள் எப்போது முடிவடையும் என்று மக்கள் கவலை அடைந்து வருகின்றனர். அரியலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் இந்த மேம்பாலக் கட்டுமானப் பணியை நேரடியாகப் பார்வையிட்டு, விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகளை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடுத்து வரும் மழைக் காலத்திற்குள்ளாவது இந்த மேம்பாலப் பணி முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் இரு மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்.