கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை, மாவட்ட கரோனா தடுப்பு சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், விருத்தாசலம் நகரத்தில் உள்ள கடைகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, முகக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, "தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் இல்லாமல் செல்லக்கூடாது. சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியருடன், அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்.
பெரும்பாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கிறார்கள். இருப்பினும் சிலர் முகக்கவசம் இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும், அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று மட்டும் கிட்டத்தட்ட 130 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் அதிகமான பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஒரு பெரிய அளவில் பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பூசியின் இருப்பு அளவு அதிகரிக்கும்போது 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். ஜுரம், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தானாக சரியாகிவிடும் என எண்ணிக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. மேலும், தாமதம் ஏற்பட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரை விடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால், சந்தேகமாக இருப்பின் சோதனை செய்து கொண்டால், மறு நாளிலே முடிவு தெரிந்துவிடும். அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பதினால் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.