முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.